Published : 24 Mar 2015 07:04 PM
Last Updated : 24 Mar 2015 07:04 PM

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, "கட்சிக்காக அதிகம் உழைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது" என்று கூறினார்.

ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்த நடிகை குஷ்பு, அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு விலகினார். இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் அவர் இணைந்தார்.

அதன் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சோனியா காந்தி அறிவிப்பு

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

நடிகை குஷ்புவுடன் சேர்த்து மொத்தம் 17 பேர் காங்கிரஸின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்களாக ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு இணையாக அஜய் மக்கான், சி.பி. ஜோஷி, சத்யவரத சதுர்வேதி, ஷகீல் அகமது ஆகிய 4 பேரும் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி உட்பட 31 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, "கட்சிக்காக அதிகம் உழைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது" என்று கூறினார்.

'தி இந்து'விடம் குஷ்பு கூறியதாவது:

எனக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், இதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச் சிக்காக அதிகம் உழைக்க வேண்டிய நேரமும், பொறுப்பும் தற்போது வந்துள்ளது. அந்த பணியை சிறப்பாக செய்வேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.

அரசியலில் குஷ்பு கடந்து வந்த பாதை

பிரபல நடிகை குஷ்பு கடந்த 2010 மே 14-ம் தேதி கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். கட்சியின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட குஷ்பு, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

2013ம் ஆண்டு பிப்ரவரியில், ஸ்டாலின் குறித்து குஷ்பு அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. திருச்சிக்கு சென்ற குஷ்பு மீது, திமுகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீடும் தாக்கப்பட்டது. ஆனாலும், குஷ்பு திமுகவிலேயே நீடித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டதாக கூறப்பட்டது. அதை குஷ்பு மறுத்தாலும், சீட் கிடைக்காததில் அவர் அதிருப்தியில் இருந்ததாகவே தகவல் வெளியானது.

இந்நிலையில், திமுக வில் இருந்து குஷ்பு விலகினார். அடுத்து எந்த கட்சியில் சேருவார் என்ற குழப்பம் நீடித்தது. பாஜகவில் குஷ்பு சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வீதிவீதியாக சென்று மக்களை சந்திப்பேன் என்று குஷ்பு கூறினார். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x