ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை முக்கிய ஆலோசனை: மார்ச் இறுதியில் பட்ஜெட் தாக்கல்?

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை முக்கிய ஆலோசனை: மார்ச் இறுதியில் பட்ஜெட் தாக்கல்?
Updated on
1 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்ற பிறகு, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடங்குவது குறித்தும், அதில் இடம் பெறும் ஆளுநர் உரை குறித்தும் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிப்.17-ம் தேதி இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. 4 நாட்கள் நடந்த கூட்டத்தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டது.

பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதி யில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தக் கூட்டத்தில், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்தும் பட் ஜெட்டை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், விரைவில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, பட்ஜெட் தாக்கல் தேதி குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in