

இலங்கைத் தமிழர்களை மீண்டும் அவர்கள் இடத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில், இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 -ல் நடைபெற்ற பேரழிவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது, “இலங்கையில் தமிழ் மக்கள் மீதான அநீதி இன்னும் தொடர்ந்து வருகிறது. போரின்போது குடியிருப்புகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்கள் இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் அளிக்கும் தீர்ப்பை உலகச் சமுதாயம் முன்னின்று நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக, ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில், விளார் பைபாஸ் பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றம் நோக்கி நடைபெற்ற சுடர் பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
ஏஐடியுசி மாநிலச் செயலர் ஜெ.லட்சுமணன், நிர்வாகிகள் வெ.சேவையா, துரை. மதிவாணன் ஆகியோர் முன்னிலை யில் சுடரை பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ள, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் அஸ்தி மற்றும் அங்குள்ள போரில் உயிர்நீத்தவர்களை சித்தரிக்கும் கல் சிற்பங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் இரா.திருஞானம், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி.சந்திரகுமார், திரைப்பட இயக்குநர் கவுதமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.