Published : 12 Mar 2015 12:47 PM
Last Updated : 12 Mar 2015 12:47 PM

புதிய தலைமுறை சேனல் மீது தாக்குதல்: தமுமுக கண்டனம்

தமிழகத்தில் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தில் இருந்து ஊடகங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சென்னை அலுவலகம் மீது சமூக விரோதிகள் சிலர் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய நிலையில் இரண்டாவது சம்பவமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது ஊடகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட அப்பட்டமான மிரட்டல் மிகுந்த சவாலாகும்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

ஊடக தனித்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு தனது உறுதி வாய்ந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாத பிற்போக்கு சக்திகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது.

தமிழக அரசு ஊடக தனித்தன்மையையும் சட்டம் ஒழுங்கையும் போர்க்கால அடிப்படையில் பராமரித்து தமிழகத்தில் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தில் இருந்து ஊடகங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x