Published : 17 Mar 2015 03:47 PM
Last Updated : 17 Mar 2015 03:47 PM

கண்ணன் ஆதரவு வியாபாரிகள் கடையடைப்பு: புதுச்சேரியில் வர்த்தகம் பாதிப்பு

புதுச்சேரியில் கண்ணன் எம்பிக்கு ஆதரவான அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் முழு கடையடைப்பு இன்று நடைபெற்றது. இதனால் வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸார் போதிய பாதுகாப்பு தரவில்லை என்று புதுச்சேரி வணிக கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கம்பன் கலையரங்கம், புஸ்சி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் எம்.பி. மற்றும் ஆதரவாளர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் வாதிட்டனர். அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில் கண்ணன் எம்.பி. தரப்பைக் கண்டித்து திங்கள்கிழமை நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் கண்ணன் எம்.பி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது ஒதியஞ்சாலை போலீஸார் கண்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, நகராட்சியின் செயல்பாட்டைக் கண்டித்து கண்ணன் ஆதரவு அமைப்பான அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடைகளை திறக்க பாதுகாப்பு வேண்டும் என சீனியர் எஸ்.பி. கவாசிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று இரவு உறுதி தரப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுச்சேரியின் முக்கிய வர்த்தக பகுதிகளான நேரு வீதி, காந்தி சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, முதலியார்பேட்டை, 100 அடி சாலை, கடலூர் சாலை, பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

கடையடைப்பால் வெளியூரில் இருந்து பொருள்கள் வாங்க வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நேராமல் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். டெம்போக்கள், பஸ்கள் கூட்டமின்றி இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி, பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தேர்வுகளும் வழக்கம் போல் நடைபெற்றன.

பொதுமக்கள், வணிகர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு கண்ணன் எம்பி தரப்பு வர்த்தகர்கள் நன்றி தெரிவித்தனர்.

புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு செயலர் பாலு கூறும்போது, "போலீஸார் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

நகராட்சி ஊழியர்கள் தரப்பு கூறும்போது, "எம்பி கண்ணனை புதன்கிழமை இரவுக்குள் கைது செய்யாவிட்டால் வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x