Published : 17 Mar 2015 12:02 PM
Last Updated : 17 Mar 2015 12:02 PM

மீனவர் பிரச்சினையில் இலங்கை பிரதமரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுக்களின் மூலம் தான் தீர்வு காண முற்பட்டுவரும் நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று விக்கிரமசிங்கே கூறியிருப்பது ஆபத்தானதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய - இலங்கை உறவு குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்லும் உரிமை சிங்களக் கடற்படைக்கு உண்டு என்று கூறியுள்ளார். இலங்கைப் பிரதமரின் இந்தக் கருத்து மனிதத் தன்மையற்றது என்பது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இலங்கைப் பிரதமர் இவ்வாறு கூறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் தந்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டும் தொனியில் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இவ்வாறு பேசியதற்காக இலங்கை சென்ற தம்மிடம் விக்கிரமசிங்கே மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அடுத்த ஒரு வாரத்திற்குள், அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமர் இலங்கைப் பயணத்தை முடித்துத் திரும்பிய இரு நாட்களில், ரணில் விக்கிரமசிங்கே இவ்வாறு கூறியிருப்பதைப் பார்க்கும் போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதோ? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை துப்பாக்கி முனையில் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம் அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும்.

இவ்வளவு சிக்கலான மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுக்களின் மூலம் தான் தீர்வு காண முடியும். இதை உணர்ந்ததால் தான் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்த சிக்கலுக்கு தீர்வு காண பேச்சு நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையடுத்து வெகுவிரைவில் அடுத்தகட்ட பேச்சுக்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று விக்கிரமசிங்கே கூறியிருப்பது வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதற்கு சமமானதாகும். இது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது.

தில்லியில் 22.01.2013 அன்று நடந்த இந்திய- இலங்கை கூட்டு ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தில், "சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்த காலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்" என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கேவும் சுஷ்மாவும் கொழும்பில் நடத்தியப் பேச்சுக்களின் போதும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் பேச்சு நடத்தி தீர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முடிவுகளை மீறும் வகையில், ரணில் செயல்படுவது இனப் படுகொலைக்களத்தின் எல்லையை வங்கக்கடலுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்துவிடும்.

தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை; இலங்கை மீனவர்களும் தமிழக கடல் எல்லைக்குள் நுழைகின்றனர். இதைத் தடுக்க மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்வது தான் தீர்வு என்று நினைத்தால், வங்கக்கடல் செங்கடலாக மாறிவிடும் ஆபத்துள்ளது. இதை உணர்ந்து இது போன்று பொறுப்பின்றி பேசுவதை விடுத்து, இருதரப்பு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ரணில் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் இதுபோன்ற சீண்டல்களைத் தொடர்ந்தால் ரணில் விக்கிரமசிங்கே போன்ற இலங்கைத் தலைவர்களை கட்டுப்படுத்த எதை செய்ய வேண்டுமோ, அதை செய்ய மத்திய அரசு தயங்கக்கூடாது" என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x