

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் குதிரையேற்றம், களரி உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளை ராணுவ வீரர்கள் நேற்று நடத்திக் காட்டினர். இதை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளம் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மாதம் 140 ஆண்கள், 39 பெண்கள், செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேர், பப்புவா நியூகுனியா மற்றும் டாங்கா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 185 பேர் இங்கு பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி பரங்கிமலையில் இன்று காலையில் நடக்கவுள்ளது. இதையொட்டி, பயிற்சி பெற்றவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. குதிரையில் அமர்ந்துகொண்டு செய்யும் சாகச நிகழ்ச்சிகள், கேரள பாரம்பரிய விளையாட்டான களரிப்பயட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த சாகச நிகழ்ச்சியை பயிற்சி பெற்றோரின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்.
ராணுவ பயிற்சி மையத்தின் லெப்டினென்ட் ஜெனரல் ஆர்பி சாஹி சாகச நிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர்பி சாஹி, “39 பெண்கள் உட்பட மொத்தம் 185 பேருக்கு கடந்த 49 வாரங்களாக உடற்பயிற்சிகள், குதிரையேற்றம், தற்காப்பு உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை நிறைவு செய்துள்ளவர்கள் நாளை (இன்று) அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்’’என்றார்.