Published : 14 Mar 2015 09:37 AM
Last Updated : 14 Mar 2015 09:37 AM

கிரானைட் விசாரணைக்கு முட்டுக்கட்டை: தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

‘விசாரணையில் உதவுவதற் காக கோரிய அதிகாரியை தமிழக அரசு தாமதமாக விடுவித்தது. விசாரணைக் குழுவின் செலவுக்காக அரசிடம் இருந்து பணம் பெறுவதில் பல தடைகள் இருந்தன. ஊழல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் கேட்டிருந்த தகவல்கள் தரப்படவில்லை. இக்காரணங்களால் விசாரணை மிகவும் தாமதமானது’ என்று அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘மதுரை மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதை விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடுவதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தைப் பார்ப்பீர்கள்’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த கிரானைட் கொள்ளைக்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல், இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்ததோடு, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதன்பிறகும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது. கிரானைட் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் உடனே பதவி விலக வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x