66ஏ உருவானதற்கு என்னை மட்டும் குறைகூறுவதா?- ஆ.ராசா

66ஏ உருவானதற்கு என்னை மட்டும் குறைகூறுவதா?- ஆ.ராசா
Updated on
2 min read

அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான 66-ஏ சட்டப் பிரிவு உருவானதன் பின்னணியில் இருந்ததாக முன்னாள் சட்ட அமைச்சர் கூறிய கருத்துக்கு ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓர் அமைச்சரவையின் முடிவை ஒரு தனி நபர் மீது சுமத்துவது நியாயம்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுகிற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு அமைந்தது என்று கூறி, உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்து கடந்த 24ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது.

அந்தத் தீர்ப்பினை அனைத்துத் தரப்பினரும் பெரிதும் வரவேற்கின்ற நேரத்தில், உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள அந்த "சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவுக்கான கருத்தை உருவாக்கியவனே நான் தான்" என்பதைப் போல, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது, எனக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வருத்தத்தையும் தருகிறது.

ஒரு சட்ட முன் வரைவு ஒரு அமைச்சகத்தால் ஆய்வுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டு, அது சட்ட அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். சட்ட அமைச்சகம், அதனை விரிவாக எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் தரும். அதற்குப் பிறகு தான் அந்த சட்ட முன் வரைவு மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வைக்கப்படும்.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகு தான் அந்தச் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அப்போது கூட, அந்தச் சட்டத்தை விவாதத்துக்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய போதுமான விதிகளின் பாதுகாப்பும், அவைத் தலைவரின் ஒப்புதலும் அவசியம் தேவையாகும்.

அந்த நிலையிலேகூட, அந்தச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு இருக்குமானால், அந்தச் சட்ட முன் வரைவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வழி வகை உள்ளது.

இப்படியெல்லாம் படிப்படியாக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு தான் இந்தச் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்திலே ஒருமனதாக நிறைவேறியது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலே கூட, இந்தச் சட்டம் தவறாகக் கொண்டு வரப்பட்டது என்று எந்த உள்நோக்கத்தையும் என் மீதோ, அல்லது நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதோ குற்றமாக எதுவும் கூறாத போது, சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் அவர்களும் சட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்து விட்டு, இப்போது எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் என் மீது பழி சுமத்துவதைப் போல ஒரு கருத்தினை வெளியிட்டிருப்பது, அவர் வகித்த பதவிக்கு உகந்ததல்ல.

இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அது ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத் தான் கருதப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல.

ஒரு சட்டம் அப்போதைய கால கட்டத்தின் அவசியம் கருதி இயற்றப்படுவதும், இயற்றப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தும்போது அதிலே உள்ள சாதக பாதகங்களை அனுபவ ரீதியாக உணர்ந்து அதிலே திருத்தங்கள் கொண்டு வருவதும், அல்லது அப்படியே ரத்து செய்வதும் கடந்த காலத்தில் பல முறை நடந்த சம்பவங்கள் தான் என்பதை பரத்வாஜ் அறியாதவரல்ல" என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in