

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. ஆபாசம் இருக்கக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளின் விதிக்கப்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 34 கிராமங்களில் கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த வார விடுமுறை கால நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லவும், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதற்கும் நீதிமன்றம் துணை நிற்க முடியாது, நிபந்தனைகள் விதித்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த மருதமுத்து மற்றும் இருவர் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.ராஜா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
ஆபாசம் இருக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகளை பின்பற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கலாம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இது தவிர புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஆடல், பாடல் நடத்த அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதி டி.ராஜா விசாரித்து, நிபந்தனைக்கு உள்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.