

மகளால் குழந்தை பெற முடியாத காரணத்தால் அவரது அம்மாவே வாடகைத் தாயாக மாறி அழகான பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான உடல்நிலை பிரச்சினைகள் மற்றும் குழந்தையின்மை தீர்வு சம்பந்தமாக நடைபெற உள்ள முகாம் குறித்து ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை சார்பாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் மையத்தின் நிறுவனர்கள் டாக்டர் டி. காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் கூறியதாவது:
சென்னையை சேர்ந்த லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கருவுற்றிருந்தார். ஆனால் ஏழாவது மாதத்தில் நஞ்சு பிரிந்து அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதனால் தாயின் நலன் கருதி வெளி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. உதிரப்போக்கு நிற்காததால் அவருடைய கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அவரது குடும்பத்தினர் எங்கள் மருத்துவமனையை அணுகினர். அப்போது அவரது உறவினர்களில் யாராவது வாடகை தாயாக இருப்பார்களா என கேட்டோம். இதற்கு லட்சுமியின் அம்மா (61) சம்மதம் தெரிவித்தார். அப்போது லட்சுமியின் அம்மாவுக்கு மாதவிலக்கு நின்று 5 வருடங்கள் ஆகியிருந்தன.
பின்னர் எங்களுடைய மருத்துவமனை சார்பாக லட்சுமியின் அம்மாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மாத விலக்கு வரவழைக்கப்பட்டது. அதன்பின்பு லட்சுமியின் கருமுட்டை மற்றும் அவரது கணவரின் விந்தணுக்களை சேர்த்து ‘icsi’ முறையில் கரு உருவாக்கப்பட்டது.
பின்னர் அந்த கரு லட்சுமியின் அம்மாவின் கருப்பையில் செலுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை, கண்காணிப்புக்கு பிறகு லட்சுமியின் அம்மாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி 2.7 கிலோ கிராம் எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. மகளுக்காக வாடகைத் தாயாக அவரது அம்மாவே மாறிய சம்பவம் தமிழகத்தில் முதன் முறையாக தற்போதுதான் நடைபெற்றுள் ளது.
ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (இன்று) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பெண்களுக்கு உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, ரத்த சோகை கண்டறிதல், பெல்விக் ஸ்கேன், பாப்மியர் டெஸ்ட் ஆகிய சோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.