Published : 23 Mar 2015 10:30 AM
Last Updated : 23 Mar 2015 10:30 AM

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.95.50 கோடி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.95.50 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்துக்கு ரூ.20 கோடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இதனால் இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நிதி ஒதுக்கும்படியும் மாவட்ட ஆட்சியர்கள் கோரியுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், நீராதாரங்களை மேம்படுத்துதல், பம்பு செட்களை புனரமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தல், குடிநீர் குழாய்களை மாற்றுதல், கைபம்பு மற்றும் மின் பம்புகளை நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூருக்கு ரூ.20 லட்சம்

தருமபுரி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று கருத்துரு அனுப்பியுள்ளனர். இதையடுத்து கடந்த 11-ம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து 16-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்திலும், குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதனடிப்படையில், குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

வேலூர் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி (மாநகராட்சிக்கு ரூ.5 கோடி உட்பட), திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.10 கோடி, காஞ்சிபுரம், திருச்சி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி, பெரம்பலூர் மாவட்டத்துக்கு ரூ.3 கோடி, அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.2 கோடி, சென்னை தவிர மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.11.50 கோடி என மொத்தம் ரூ.66.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.10 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.10 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி, பேரூராட்சிக்கு ரூ.3 கோடி, கால்நடை துறைக்கு ரூ.1 கோடி ஆக மொத்தம் 29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து மொத்தமாக ரூ.95.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x