

கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் சொன்ன பொய் ஒரு மாணவியின் உயிரையே பறித்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி அருகேயுள்ள இட்டமாடு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராமசந்திரப்பா. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு தேஜஷ்வினி (18) என்ற மகளும் தர்ஷன் (15) என்ற மகனும் உள்ளனர். தேஜஷ்வினி பிடதியில் உள்ள பசவேஷ்வரா பி.யூ.கல்லூரியில் வணிகவியல் பிரிவில் பி.யூ.சி. இரண்டாமாண்டு (12-ம் வகுப்பு) படித்து வந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இட்டமாடு கிராமத்தில் தேர்வு முடிவுகளை பார்க்க இணையதள வசதி இல்லை.எனவே பிடதியில் உள்ள உறவினர் அனுமந்தப்பாவிடம் தேஜஷ்வினியின் முடிவுகளை இணையதளத்தில் பார்க்குமாறு கூறிவிட்டு குமாரியும் ராமசந்திரப்பாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
தேஜஷ்வினியின் தேர்வு முடிவுகளை பார்த்த அனுமந்தப்பா அவரை செல்போனில் தொடர்புகொண்டு, 'நீ தேர்வில் தோல்வியடைந்து விட்டாய். ஒழுங்காக படிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய்' என விளையாட்டாகத் திட்டியிருக்கிறார். அதே நேரத்தில் தேஜஷ்வினியின் தந்தை ராமசந்திரப்பாவிடம் செல்போனில் பேசிய அவர், 'நான் தேஜஷ்வினியிடம் விளையாட்டுக்கு பெயில் என சொல்லி இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கோபமாக பேசுங்கள்' என சொல்லி இருக்கிறார்.
மதியம் 12.30 மணிக்கு இனிப்புகளுடன் வீட்டுக்கு வந்த ராமசந்திரப்பா, மகள் தேஜஷ்வினியை தேடினார். வீடு முழுக்க தேடியும் அவரை காணவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளிலும் விசாரித்தபோதும் எதுவும் தெரியவில்லை.
அதிர்ச்சியில் உயிர் பிரிந்தது
மதியம் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை பார்த்தபோது தேஜஸ்வினி சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிடதி போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நன்கு நீச்சல் அறிந்த தேஜஷ்வினி கிணற்றில் விழுந்து உயிரிழக்க வாய்ப்பில்லை என அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பினர்.
பிரேத பரிசோதனையில் மாரடைப் பால் தேஜஸ்வினி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. “கிணற்றில் குதிக்கும்போதே அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது” என உறவினர்கள் தெரிவித்தனர்.
கண்களாவது உலகத்தை பார்க்கட்டும்
பிரேத பரிசோதனைக்கு பிறகு தேஜஷ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை இட்டமாடு கிராமத்தில் தேஜஷ்வினியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.