Last Updated : 07 Mar, 2014 08:09 AM

 

Published : 07 Mar 2014 08:09 AM
Last Updated : 07 Mar 2014 08:09 AM

பாஜக - தேமுதிக பேச்சுவார்த்தை: ராஜ்நாத்சிங்கை விஜயகாந்த் சந்திக்கிறார்; பாமக-வும் நெருங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நீண்ட நாட்களாக தெளிவுபடுத்தாமல் இருந்த தேமுதிக, பாஜக-வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் டெல்லியில் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியபோதே பா.ஜ.க.வுடன், தேமுதிக கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இதற்கிடையே, தேமுதிக-பாஜக-மதிமுக கூட்டணியை அமைக்கவும் சிலர் முயற்சி மேற்கொண்டனர்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், மதிமுகவும் பாஜகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. ஆனால், தேமுதிக மட்டும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வந்தது.

இதற்கிடையே, அதிமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக, தேமுதிக-வை கூட்டணியில் சேருமாறு திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கவே கூடாது என்று உறுதியாக இருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், தேமுதிக வந்தால் வரவேற்போம் என்று அறிவித்தார்.

இதனால், ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, பாஜக அணியுடன் கூட்டு சேருவாரா அல்லது திமுக-வின் அழைப்பை ஏற்று அவர்களுடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது அழைப்புக்கு விஜயகாந்த் பதில் தரவே இல்லை.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட புதன்கிழமை மாலை, திமுக-வினருடன் பேச்சு வார்த்தை நடத்த அறிவால யத்துக்கு தேமுதிக வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்க ளாக நிலவி வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது” என்று தேமுதிக தலைமை வியாழக்கிழமை மாலை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் ஓரிரு நாளில் சந்தித்துப் பேசுவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

பாமகவில் குழு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் வியாழக்கிழமை காலையில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க கட்சித் தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்த கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஒரு குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார் என்று அக்கட்சி வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x