தமிழகத்தில் ஆபரேஷன் ஆம்லா ஒத்திகையில் 30 பேர் பிடிபட்டனர்

தமிழகத்தில் ஆபரேஷன் ஆம்லா ஒத்திகையில் 30 பேர் பிடிபட்டனர்

Published on

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் ஆம்லா’ பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல வேடமணிந்து வந்த 30 பேர் பிடிபட்டனர்.

2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அம்சமாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை 'ஆபரேஷன் ஆம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 13 கடலோர மாவட்டங்களில் உள்ள தமிழக காவல் துறையினர், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை ஆகிய 3 பிரிவினரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங்களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சம்.

சென்னையில் காசிமேடு, போர் வீரர்கள் நினைவுச் சின்னம், மாமல்லபுரம் மற்றும் சில கடல் பகுதிகளில் இருந்து நிலப்பகுதிக்குள் நுழைந்த, தீவிரவாதிகள்போல வேடமணிந்த வீரர்களை தமிழக போலீஸார் சரியாக பிடித்தனர். இதற்காக நேற்றைய தினம் சென்னையின் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடற்கரை அருகே இருக்கும் சாலைகளில் தடுப்புகள் வைத்து, வாகனங்களின் வேகத்தை குறைத்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் தமிழகம் முழுவதும் நேற்று மாலை வரை தீவிரவாதிகள் போல ஊடுருவிய 30 பேரை பிடித்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் சோதனை நடந்தது. அப்போது வேறு பல குற்றங்கள் செய்தவர்களும் போலீஸாரிடம் சிக்கினர். நாளை (20-ம் தேதி) காலை 6 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in