Published : 09 May 2014 03:52 PM
Last Updated : 09 May 2014 03:52 PM

அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி: முதல்வர் நடவடிக்கை அவசியம்

பிளஸ் 2 தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி நிலவுவதால், தரமான கல்வி அளிக்க முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கை தேவை என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி இன்று வெளியிட்ட அறிக்கையில், "பிளஸ் 2 தேர்வுகளில் தஞ்சை காதுகேளாதோர் அரசு மேல்நிலை பள்ளியில் எழுதிய அனைத்து 21 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல், தருமபுரி அரசு காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 24 மாணவ-மாணவியரில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தகைய படுமோசமான தேர்ச்சிக்கு தகுதியற்ற தலைமை ஆசிரியர்கள், பாடப் பிரிவுகளில் பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்காதது காரணமாகும். மேலும், கல்வித் துறைக்கான விதிகளை பின்பற்றாமல் தன் இஷ்டம்போல் மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகள் நடந்துகொண்டதே இந்த மோசமான நிலைமைக்கு காரணமாகும்.

தகுதியற்ற தலைமை ஆசிரியர்கள்:

மேல்நிலை பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதியில் தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும். ஆனால், தருமபுரியில் மேல்நிலை கல்வியை பற்றி சற்றும் அறியாத பட்டதாரி ஆசிரியரே விதிகளுக்கு எதிராக தலைமை ஆசிரியராக மாற்றுத்திறனாளி நலத்துறை நியமித்துள்ளது.

தஞ்சை மேல்நிலை பள்ளியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவு இல்லாத நிலையில், அப்பாட பிரிவு ஆசிரியரை தலைமை ஆசிரியராக மாற்றுத்திறனாளி நலத்துறை நியமித்து நிர்வாகம் செய்கிறது.

ஆசிரியர்கள் இல்லாத அவலம்

தருமபுரி அரசு காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் பொருளியல், வணிகவியல், கணக்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆசியிரியர்களே இல்லை. அப்பள்ளியில் உள்ள 39 மொத்த பணியிடங்களில் 19 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம். இதே நிலைமைதான் தஞ்சையிலும் உள்ளது. சென்னை பூந்தமல்லி மற்றும் திருச்சி அரசு பார்வையற்றோர் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி இருந்தாலும், அங்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் இல்லை.

கண்காணிப்பே இல்லாத மாற்றுத்திறனாளி பள்ளிகள்

தமிழகத்தல் பல்வேறு நிலைகளில் 22 அரசு மாற்றுத்திறனாளி பள்ளிகள் இயங்குகின்றன. இவை அனைத்தும் மாற்றுத்திறனாளி ஆணையரகத்தின் கீழ் நேரடியாக செயல்படுவதால், மாவட்டங்களில் அப்பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்க உரிய அதிகாரிகளோ நடைமுறையோ இல்லை. இதனால், ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் காரணமாக அமைகிறது.

மாற்றுத்திறனாளி துறையால் இயக்கப்படும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் குறைவதை தடுக்கவும், அப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைத்திட, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையின் கீழ் கொண்டுவர தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x