

மத்திய பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித் துள்ளனர்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை, விவசாயிகளுக்கு ரூ.8.5 லட்சம் கோடி கடன், 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காதது, சேவை வரி உயர்வு போன்ற அறிவிப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிறுவன வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலம், மத்திய பாஜக அரசு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதார திட்டங்கள் மற்றும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு, 7 கோடி புதிய வீடுகள் கட்ட இருப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப் புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், பெரிய நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்துள்ள மத்திய அரசு, தனிநபர்களின் வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது சரியல்ல.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):
மக்களின் வாழ்க்கையில் உள்ள வறட்சியை விரட்டவும், வளர்ச் சியை எட்டுவதற்கும் போடப்பட்ட பட் ஜெட்டாக அமைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு சலுகை அறிவிப்பு, கல்வி வளர்ச்சிக்கு நிதி, தேசப் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):
சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குதல், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, உயர்கல்வி பெற கடன் வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மத்திய பட்ஜெட் இல்லை.
ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்):
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முக்கிய திட்டங்கள் இல்லை. நாட்டின் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்த போதும், பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவான திட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் இந்த பட்ஜெட் அமையவில்லை.
சரத்குமார் (சமக தலைவர்):
2022-ம் ஆண்டில் இந்தியா பணக்கார நாடாக உருமாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற் றுள்ளது மகிழ்ச்சியானது. இருப்பினும் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர்):
எஸ்.சி. பிரிவின ருக்கு ரூ.30,851 கோடியும், எஸ்.டி. பிரி வினருக்கு ரூ.19,980 கோடியும் ஒதுக்கி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 2 பிரிவினர்களுக்கும் துணைத் திட்டங்களின் கீழ் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
பாரிவேந்தர் (ஐஜேகே நிறுவன தலைவர்):
பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதால், அந்நிய முதலீடு அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும். மக்களுக்கு சுமையை ஏற்றாத பட்ஜெட் என்பதால், இதை நாங்கள் வரவேற் கிறோம்.
எஸ்.எஸ்.ஹாரூண் ரசீத் (மமக இணை பொதுச்செயலாளர்):
கார்ப்பரேட்களுக் கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட்களுக்கான பட்ஜெட்டாக இருப்பதையே காட்டுகிறது.
செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர்):
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு, வேளாண் விளைபொருளுக்கு தேசியச் சந்தை போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்கள். விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் பற்றி எதுவும் கூறவில்லை. நதிகள் தேசியமயம், விளைபொருளுக்கு விலை நிர்ணயம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை களுக்கு தடை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். கழிப்பறை களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத் துவம்கூட, உணவளிக்கும் உழவுத் தொழிலுக்கு கொடுக்கப்படவில்லை என்பதுதான் ஏமாற்றமளிக்கிறது.
ஜி.கே.நாகராஜ் (கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர்):
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்றவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கவை. உள்கட்டமைப்பு வசதி,கல்வித்துறை, சுகாதாரத்துறை,ஊரக வளர்ச்சித்துறை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனுக்கு ரூ.8.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி.
மக்களை பாதிக்கும் வகையில் பட்ஜெட் இருப்பதாக பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான திட்டங்களை வரவேற்றுள்ளார்.