

எண்ணூர் காமராஜர் துறைமுகத் தில் சரக்குகளை கையாளும் திறனை 2020-ம் ஆண்டுக்குள் 30 மில்லியன் டன்னிலிருந்து 100 மில்லியன் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம், 2001-ம் ஆண்டில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,056 கோடி செலவில் தொடங்கப்பட்டது. மேலும், 2004-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தொடங்கப்பட்ட 12-வது துறைமுகமான இதில் கப்பல் நிறுத்தும் முனையங்கள் 6 உள்ளன. இவற்றில் 5 முனையங்கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், இத்துறை முகத்தில் சரக்குகளை கையாளு வதற்கான திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, எண்ணூர் காமராஜர் துறைமுக அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
தனியார் துறைமுகங்களின் வருகையால் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துறை முகங்களுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, துறைமுகங்களை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்தில் தற் போது ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்படுகின்றன. இதை வரும் 2020-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன்னாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, 50.8 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கான முனையம் வரும் 2016-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதைத் தவிர, இந்தியன் ஆயில் நிறுவனத்துக்காக ரூ.5,150 கோடி செலவில் 5 மில்லியன் டன் சரக்கை கையாளும் எல்பிஜி எரிவாயு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த முனையம் வரும் 2018-ம் ஆண்டு செயல்படத் தொடங்கும். இதன் மூலம், கிழக்கு கடலோர பிராந்தியத்தில் எல்பிஜி எரிவாயுவுக்காக அமைக்கப்பட்ட முதல் முனையம் என்ற பெருமை சேரும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.