

தமிழகத்தில் மானியம் இல்லாத சிலிண்டர்களின் விநியோகம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 50 லட்சம் பேர் சமையல் எரிவாயு பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ரூ.404.50 விலை உள்ள மானிய விலை சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் பலர் மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணைந்து வருகிறார்கள்.
இதனால் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளது.
நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணைந்த நுகர்வோர்களிடம் இருந்து சிலிண்டர்கள் வாங்கும் போது ரூ.404.50-க்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தில் இணையாத நுகர்வோர் இனி சந்தை விலை கொடுத்துத்தான் சிலிண்டர்களை வாங்க முடியும்.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், மானிய விலையில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர்களிடம் மானிய விலை சிலிண்டர்களை விட்டுக் கொடுக்கும்படி கூறிவருகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 5 சதவீத நுகர்வோர்கள் தங்களுடைய மானிய விலை சிலிண்டர்களை விட்டுக் கொடுத்துள்ளனர். சந்தை விலை கொடுத்து சமையல் எரிவாயு பயன்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி)அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது மானியம் இல்லாத சிலிண்டர்களின் விநியோகம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 44 ஆயிரத்து 463 மெட்ரிக் டன் ஆக இருந்த மானியம் இல்லாத சிலிண்டர்களின் விநியோகம், தற்போது 52 ஆயிரத்து 972 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஏப்ரலுக்கு பிறகு மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறும் போது, “தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தில் தற்போதுவரை 85 சதவீத நுகர்வோர் இணைந்துள்ளனர். ஜூலை மாதத்துக்கு முன்பு மானிய திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு அதற்கு முந்தைய மாதத்துக்கான மானிய தொகை வழங்கப்படும். ஜூலை மாதத்துக்கு பிறகு இணையும் நுகர்வோருக்கு அதற்கு அடுத்த மாதத்தில் இருந்துதான் மானிய தொகை வழங்கப்படும்.வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நுகர்வோர் அனைவருக்கும் சந்தை விலையில் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களுக்கு மட்டும் மானிய தொகைக்கு மேல் உள்ள தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.