Published : 04 Mar 2014 09:09 PM
Last Updated : 04 Mar 2014 09:09 PM

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி: வி.சி. கட்சியுடனான பேச்சில் இழுபறி

திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், பொதுச் செயலாளர் அபுபக்கர் மற்றும் பொருளாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினருடன் திமுக குழுவினர் பேச்சு நடத்தினர். திமுக தரப்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின், ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்வது என்று முடிவானது. அது எந்தத் தொகுதி என்பதைப் புதன்கிழமைக்குள் இறுதி செய்வதாக திமுக உறுதி அளித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து, காதர் மொய்தீன் கூறியதாவது:

நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். இந்தக் காலக் கட்டத்தில் திமுகவைப் போல், எங்கள் கட்சியும் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நான்கு பிரதிநிதிகளாவது இடம் பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இந்தக் கருத்தை திமுக தலைவர் கருணாநிதியிடமும், தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தைக் குழுவிடமும் தெரிவித்தோம்.

இறுதியில் முஸ்லிம் லீக் கட் சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதாக முடிவாகியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் திருப்தி இல்லையென்றாலும், மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். நாங்கள் பலமுறை வெற்றி பெற்ற வேலூர் தொகுதியை கேட்டுள்ளோம். மேலும் மத்திய சென்னை, மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகள் கொண்ட பட்டியல் அளித்துள்ளோம். இம்முறை நாங்கள் எங்கள் கட்சி சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். இவ்வாறு காதர்மொய்தீன் தெரிவித்தார்.

வி.சி. கட்சியுடன் பேச்சில் இழுபறி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் வன்னியரசு ஆகியோர் கொண்ட குழு திமுக குழுவினரிடம் பேச்சு நடத்தியது. இதில், இரு தரப்பிலும் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை, திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,'3 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, மீண்டும் புதன்கிழமை கூடிப் பேசவுள்ளோம்,' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x