வழக்கு முடியும் வரை திருமணம் இல்லை: முஸ்லிம் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு

வழக்கு முடியும் வரை திருமணம் இல்லை: முஸ்லிம் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு
Updated on
1 min read

விருதுநகரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மீட்கப்பட்ட முஸ்லிம் சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வில்லிப்புத்தூர் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷாபானு (16) என்ற சிறுமிக்கு 8.3.2015 அன்று திருமணம் நடக்கவிருந்தது. தகவலறிந்த அதிகாரிகள் ஆயிஷாபானுவை மார்ச் 2-ம் தேதி மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்நிலையில் ஆயிஷா பானுவை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி மதுரை நெல்பேட்டை எம்.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை சமூக நல அதிகாரிகள் தடுக்கின்றனர். முஸ்லிம்கள் தனிச் சட்டப்படி நடக்கும் திருமணங்களை தடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ஆயிஷாபானுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று, இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகள் ஆயிஷாபானுவை ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதிகள் விசாரித்தனர்.

சிறுமியின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. திருமணத்துக்கு வயது வரம்பு உள்ளது. குழந்தை திருமண தடைச் சட்டம் பொதுவானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், பெற்றோர் தரப்பில் இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் சிறுமியை பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in