Published : 25 Mar 2015 07:07 PM
Last Updated : 25 Mar 2015 07:07 PM

அதிமுக அரசின் பட்ஜெட் கானல் நீராகவே உள்ளது: விஜயகாந்த்

தமிழக பட்ஜெட்டில் புதுமையும் இல்லை, புதிய திட்டங்களும் இல்லை, மக்களுக்கான சலுகைகளும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வரிக்கு வரி பெருமிதம் கொண்டு 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து லஞ்சத்திலும், ஊழலிலும் ஊறித்திளைத்து வருவாய்க்குமேல் சொத்து சேர்த்து, அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற, ஒரு குற்றவாளியின் வழிகாட்டுதலில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கேட்கும் போது தமிழக மக்களுக்கு இதை விட வேறு அவமானம் ஏதுமில்லை. இச்செயல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

2011 ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் கோடி கடன் என்றும், அதனால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அரசால் சொல்லப்பட்டது. ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் மொத்த கடன் தொகை இரண்டு லட்சத்து பதினோராயிரம் கோடி என்பதை பார்க்கும் பொழுது தமிழக மக்களுக்கு தலைச்சுற்றலே வந்துவிடும் போல் உள்ளது. இது தான் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் அதிமுக ஆட்சியின் லட்சணமா?

இந்த ஆண்டு 32,990 கோடி கடன்பெற அனுமதி இருந்தாலும், 30,446 கோடி மட்டுமே கடன் பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. கடன் குறைவாக பெறப்பட்டுள்ளது என தான் வாங்கிய கடனுக்கு நியாயம் கற்பிக்கும் அதிமுக அரசு இரண்டு லட்சத்து பதினோராயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்காக என்ன நடவடிக்கையை இ எடுத்துள்ளது?

பதவிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் வாங்கிய கடனில் எவ்வளவு திருப்பி செலுத்தியது என்பதை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கவேண்டும். இந்த கடன் தொகைக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுமார் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி அதன் மூலம் மின் உற்பத்தி செய்து, தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவையை பூர்த்தி செய்துள்ளதைப் போல தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவையும் மீறி, தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் தான் அதிமுக அரசு இந்த நிலையை அடைந்துள்ளது.

புதிய மின் திட்டங்களை துவக்குவதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல் உள்ளது. உடன்குடி மின் திட்டம் குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவும் சொல்லப்படாததே இதற்கு சான்றாகும். தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதன் மர்மம் என்ன? தங்களின் சுயலாபத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறதா? இதனால் சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. லஞ்சமும் ஊழலும் தான் மின்வாரியத்தின் நஷ்டத்திற்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.

வரி இல்லாத நிதிநிலை அறிக்கை என்று பெருமை பேசும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக மக்களின் வாக்குகளை பெற்று அதிமுக அரசு பதவி ஏற்ற பிறகு, 2012ல் இதுபோன்று பல பொருட்களுக்கு மதிப்புக்கூட்டுவரியை அதிகளவு உயர்த்தியது. தற்போது மீண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்ற நிலை வந்த உடன் அதிமுக அரசால் உயர்த்தப்பட்ட மதிப்புக்கூட்டுவரியை சில பொருட்களுக்கு மட்டும் குறைத்து விட்டு, ஏதோ காலம் காலமாக விதிக்கப்பட்ட வரியை குறைத்ததை போல தமிழக மக்களிடம் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க அதிமுக அரசு முயல்கிறது.

இந்த நிதி நிலை அறிக்கை கடந்த நான்கு ஆண்டுகள் அதிமுக அரசால் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகளின் தொகுப்பாகவும், ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சம்பிரதாயமாகவும் உள்ளது.

அதிமுக அரசின் இந்த இறுதி நிதி நிலை அறிக்கையில் புதுமையும் இல்லை, புதிய திட்டங்களும் இல்லை, மக்களுக்கான சலுகைகளும் இல்லை. மக்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்களும் இல்லை. ஆகமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வெறும் "கானல் நீராகவே" உள்ளது.'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x