

கோவை மேயர் பதவியை ராஜி னாமா செய்த செ.ம.வேலுச்சாமி எங்கிருக்கிறார் என்பதுதான் கோவை அதிமுக வட்டாரத்தில் இப்போது பேச்சாக இருக்கிறது.
செ.ம வேலுச்சாமியிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பை அதிமுக தலைமை பறித்ததைத் தொடர்ந்து, அவர் தனது மேயர் பதவியையும் இரவோடு இரவாக ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செ.ம.வேலுச்சாமியின் காரில் விபத்துக்குள்ளான இளைஞர் சந்திரசேகர் நிலை மிகவும் மோசமாகிவிட்டதாக தகவல்கள் பரவின.
ரூ.1 கோடி பேரம்?
காரில் அடிபட்ட சந்திரசேகர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையிலேயே செ.ம.வேலுச்சாமியும் அட்மிட் ஆகியிருக்கிறார் என்றும், சந்திரசேகர் குடும்பத்திடம் ஒரு கோடி ரூபாய் வரை பேரமும் நடந்துகொண்டு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேசமயம், கோவை மாநக ராட்சி கூட்டத்துக்கு வராமல் இருக்க தனது ஆதரவுக் கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு ஊட்டியில் தங்கியிருப்பதாகவும் வதந்திகள் பறந்தன. ஆனால் எங்கு தேடியும் செ.ம.வேலுச்சாமியை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விபத்தில் தொடர்புடைய கார் டிரைவர் மட்டும் போலீஸில் சரண்டராகி, காரில் மேயர் வரவில்லை என்று சொல்வதாகவும், மருத்துவமனையில் இருக்கும் சந்திரசேகரின் நிலை சீராகும் வரை வழக்கு பதிவு செய்வதை தாமதப்படுத்துவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டன.
சட்ட ஆலோசனை
இதற்கிடையே நம்மிடம் பேசிய உளவுப் பிரிவு போலீஸார் சிலர், 'இந்த விபத்து வழக்கிலிருந்து தப்பிக்க சட்டரீதியான முயற்சிகளை வேலுச்சாமி எடுத்து வருகிறார். ஆனால் இந்த விபத்து வழக்கில் கார் டிரைவர்தான் அகப்படுவார். காருக்குள் அமர்ந்திருப்பவர் மீது வழக்கு பாய வாய்ப்பே இல்லை. ஆனால் செ.ம.வேலுச்சாமி விஷயத்தில் அவர் மீதான கட்சிக்காரர்களின் புகார்களும், அவருடைய அரசியல் உள் குழப்ப வேலைகளும் சேர்ந்துகொண்டு அவரது பதவியை பறித்துள்ளது என்று தெரிவித்தனர்.