Published : 31 Mar 2015 09:52 AM
Last Updated : 31 Mar 2015 09:52 AM

முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப் பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட், பாமக, புதிய தமிழகம் கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் (திமுக) எழுந்து, ‘திமுக கொடுத்துள்ள கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார். அவை ஆய்வில் இருப்பதாக கூறி, அவருக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் அனுமதி மறுத்தார். இதை யடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் பேரவை யில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதேபோல, கவன ஈர்ப்புத் தீர்மானங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததைக் கண் டித்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்களும் பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே நிருபர் களிடம் மு.க.ஸ்டாலின் கூறிய தாவது:

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி சில பிரச்சினைகளை எழுப்பினோம். ஒத்திவைப்பு மற்றும் கவன ஈரப்புத் தீர்மானத்தின்கீழ் பல் வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி விவாதிக்க அனுமதி கேட்டு எழுதிக் கொடுத்தோம். எந்த தீர்மானமும் அவையில் எடுக்கப்பட வில்லை. பிளஸ் டூ வினாத்தாள் வெளியானது, குடிநீர் தட்டுப்பாடு, பருப்பு கடத்தல், வேளாண் பொறியாளர் தற்கொலை, பெண் நீதிபதி மீது தாக்குதல் என்பன குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்னும் 2 நாட்கள்தான் சட்டப்பேரவை நடக்க இருக்கிறது. இந்நிலையில் எந்த தீர்மானத்தையும் பேரவைத் தலைவர் எடுக்காத காரணத்தால் அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

துரைமுருகன் (திமுக):

காட்பாடி - திருவலம் சாலையில் கடந்த 22-ம் தேதி இரவு நடந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரத்தில் வேலூர் ஆட்சியருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்தக் கோருவது தொடர்பாக விவாதிக்கக்கூட அனுமதிக்க வில்லை.

சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்):

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு, நெல் விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் மூடலால் தொழிலாளர்கள் வேலை இழப்பது உள்ளிட்ட 104 தீர்மானங்களை வழங்கி இருக்கிறோம். எந்தப் பிரச்சினையையும் எடுத்துக் கொள்ள அரசு தயாராக இல்லை. குறிப்பாக வேளாண் பொறியாளர் தற்கொலை தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினோம். பேரவைத் தலை வர் அனுமதி மறுத்துவிட்டார். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

கணேஷ்குமார் (பாமக):

வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடப்படுகிறது. இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இது குறித்து விவாதிக்க பேரவைத் தலைவர் மறுத்ததால் வெளிநடப்பு செய் தேன்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தலித் இளைஞர் அவமானப்படுத்தப்பட்டது, வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியானது, உடன்குடி மின் திட்டம் ரத்து, ‘கொம்பன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x