

சொத்து வரி நிலுவை காரணமாக, நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரின் வீடுகளுக்கு ஊட்டி நகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊட்டி நகராட்சியில் 2014-15-ம் நிதி ஆண்டிற்கான சொத்து வரி மற்றும் குடிநீர் வரி வசூலிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சொத்து வரி கட்டாத வீடுகளுக்கு நகராட்சி கூடுதல் வருவாய் அதிகாரி ஷாஜகான் தலைமையில் ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள்.
சினிமா நடிகர், நடிகைகள் பலர் ஊட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி வைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பின் இடையே ஒய்வெடுப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
ராயல் கேஸ்டில் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் ஆகியோர் வீடுகள் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீடுகளுக்கு நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
பல தடவை கடிதங்கள் அனுப்பியும் வரி செலுத்தவில்லை. இதனால் ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்த நோட்டீஸ் அவர்களுடைய வீடுகளில் ஒட்டப்பட்டு உள்ளது.
சொத்துவரி பிரச்சினை குறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறும் போது "'ராயல் கேஸ்டில்' அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் மற்றும் தொழில் அதிபர்களின் பெயரில் உள்ள கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி நாங்கள் ஒட்டிய நோட்டீசை குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்து எறிந்ததால் தற்போது 'ஸ்டென்சில்' கட்டிங் மூலம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளோம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.