

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன் கிடந்த 11 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காங்கிரஸ் குளச்சல் நகர தலைவர் சபீன் (35). துறைமுக தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பிளாஸ்டிக் வாளியுடன் சுற்றித் திரிந்துள்ளனர்.
அவ்வழியே சென்ற மீனவர்கள், இருவரிடமும் விசாரித்தனர். அதற்கு சபீனுக்கு மீன் கொண்டு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சபீனின் குடும்பத்தினரை அழைத்து பேசாமல், அவரது வீட்டருகே அந்த வாளியை வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் அந்த வாளியை எடுத்து பார்த்துள்ளனர். அதில் மணல் நிரப்பப்பட்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் குளச்சல் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், குளச்சல் ஏ.எஸ்.பி.கங்காதர், இன்ஸ்பெக்டர் ராஜ், வெடிகுண்டு நிபுணர் குழு சப் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டுகள் இருந்த வாளியை குளச்சல் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸார், அதை மணல் மூட்டைகளின் நடுவே பாதுகாப்பாக வைத்தனர். திருநெல்வேலியிலிருந்து வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர், வாளியை அருகிலிருந்த வாழைத்தோப்புக்கு எடுத்துச் சென்று வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். மொத்தம் 11 நாட்டு வெடிகுண்டுகள் அந்த வாளியில் இருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக கோடிமுனையைச் சேர்ந்த ஜெரோம் (43), குளச்சல் குழந்தை ஏசு காலனியை சேர்ந்த டைனிஸ் (28) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கிராமங்களில் பதற்றம்
11 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியிருப்பதால் குளச்சல் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விரைவில் ஈஸ்டர் பண்டிகை வரவுள்ள நிலையில் குளச்சல் கடலோரப் பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டிருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வன்முறை நிகழாமல் தடுக்கும் வகையில் குளச்சல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தர விட்டுள்ளார்