கடைசி நாளில் நடந்த சோகம்: கால்வாய்க்குள் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் உட்பட 3 பேர் பரிதாப பலி - 8 குழந்தைகள் படுகாயம்

கடைசி நாளில் நடந்த சோகம்: கால்வாய்க்குள் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் உட்பட 3 பேர் பரிதாப பலி - 8 குழந்தைகள் படுகாயம்
Updated on
1 min read

கால்வாய்க்குள் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பள்ளிக் குழந்தைகள் 8 பேர் காயமடைந்தனர். பள்ளியின் கடைசி வேலை நாளில் நடந்த இந்த விபத்தால், இறந்த மாணவனின் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் உள்ள எஸ்.ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேன் நேற்று காலை மாணவ, மாணவியரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. கருங்கல்லை சேர்ந்த ஜெனிஷ் (27) வேனை ஓட்டினார். மாணவ, மாணவியர் 9 பேர், ஆயா நேசம் ஆகியோர் வேனில் இருந்தனர்.

புதுக்கடையை அடுத்த வேங்கோடு பாலம் அருகே வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர டீக்கடை மீது மோதி, கால்வாய்க்குள் கவிழ்ந்தது. வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த சிலரும் வேனுக்கு அடியில் சிக்கினர்.

அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேனுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். ஓட்டுநர் ஜெனிஷ், கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த லதா (63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேனுக்குள் இருந்த பள்ளி குழந்தைகள் 9 பேரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சஜன்குமார் (8) என்ற 4-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த அனிதா (7), அஸ்வின் (7), ஜோயிலின்(4), அஸ்வின் கிறிஸ்டி(8), பெர்னலின் (5), பியூரின் ஜெனி (8), ஜோயி லின்டான் (5), சாம்லின் அஸ்வினி ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்ததை அறிந்து மருத்துவமனைக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். இப்பள்ளியில் எல்கேஜி முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுதான் பள்ளியின் கடைசி வேலை நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமற்ற வாகனத்தால் விபத்து!

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் தரமற்று இருந்தது தெரியவந்துள்ளது. வேன் பிரேக் பிடிக்காததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட வேங்கோடு பாலம் பகுதி ‘எல்’ வடிவில் உள்ள ஆபத்தான இடம். இந்த சாலையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கன்னி யாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகள் வழியாக தரமற்ற வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அதி கரித்து வரு கின்றன. குழந்தைகளின் பாது காப்புக்கு உத்தரவாதம் இல்லாத பள்ளி வாகனங்களுக்கு கட்டுப் பாடு விதிக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலர்கள் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in