

மத்தியில் மோடி ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஜோடி ஆட்சி நடக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேசினார்.
மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதில், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேசினார். ''மத்தியில் மோடி ஆட்சி. மாநிலத்தில் ஜோடி ஆட்சி. இந்த ஜோடியிலே ஒருவர் உள்ளே இருக்கிறார். மற்றொருவர் வெளியே இருக்கிறார்.
வெளியே இருப்பவர் அதிகம் பேசமாட்டார். உள்ளே இருப்பவர் இரவு எட்டு மணிக்கு மேலேதான் பேசுவார். உள்ளே இருப்பவர் பேசுவதற்கு கூட அவ்வளவு உரிமை இல்லை. ஆனால், அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
அருண் ஜேட்லி தமிழ்நாட்டுக்கு வந்தார். வேறு யாரிடம் பேசவில்லை. நேரடியாக ஜெயலலிதாவைச் சந்தித்தார். இருவரும் பேசினார்கள். அவர்கள் பேசிய போது பன்னீர்செல்வம் கூட இல்லை.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் மத்திய அரசால் பறிக்கப்படுகிறது'' என்று க.அன்பழகன் குற்றம்சாட்டினார்.