Published : 25 Mar 2015 08:37 PM
Last Updated : 25 Mar 2015 08:37 PM

தமிழர்களுக்கு தாமரைச் சின்னத்தையே தெரியாது: குஷ்பு

தமிழக மக்களுக்கு தாமரைச் சின்னம் யாருடையது என்றே தெரியாது. அதுதான் இங்கு பாஜகவின் நிலை என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னையில் இன்று (புதன்கிழமை) பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கட்சியைப் பொறுத்த அளவில், நான் தேசிய அளவிலான பொறுப்பை வகிக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விருப்பம் தெரிவித்து வந்தார்.

அதேபோல, எனது திறமையை மதிப்பிட்டு தலைவர் சோனியா காந்தி வழங்கி இருக்கும் இந்த பொறுப்புக்கு இணங்க திறனுடன் செயல்பட அனைத்து முயற்சிகளையும் நான் எடுப்பேன்" என்றார் குஷ்பு.

தமிழக காங்கிரஸில் பிளவு இல்லை

தமிழக காங்கிரஸ் இரு அணிகளாக செயல்படுவதாக பத்திரிகையாளர் கேட்டதற்கு பதில் அளித்த குஷ்பு," தமிழக காங்கிரஸ் பிளவுபட்டு இருப்பதாக மற்றவர்கள்தான் கூறுகின்றனர். ஆனால் எங்களது நிலை அவ்வாறு இல்லை. பி.சிதம்பரம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனை தனித்து தமிழக காங்கிரஸ் இல்லை. நாங்கள் ஓர் அணியாகவே இருக்கிறோம்.

காங்கிரஸை தவிர்த்து யாருமே இருக்க முடியாது. இந்த நாடு அடைந்திருக்கும் ஜனநாயகமே காங்கிரஸ் அளித்தது தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சிதம்பரம் நடத்திய மாநாடு எங்களுக்கு தெரியாமல் நடக்கவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம்" என்று கூறினார்.

அப்போது நீங்கள் இருந்த திமுக-வில் ஜனநாயகம் இல்லையா?

நான் ஒரு கட்சியிலிருந்து விலகி இங்கு வந்தேன் என்பதனால், அந்த கட்சி குறித்து தவறாக கருத்து கூற வேண்டும் என்று அவசியமில்லை.

காங்கிரஸுக்கு தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கத் தயாராக உள்ளேன். திமுக தலைவர் மீது என்றுமே எனக்கு மாறாத மரியாதை உண்டு.

ராகுல் காந்தி எங்கே போனார்?

துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நிலைப்பாடு குறித்து அவரே பேசுவார். இது தொடர்பாக அவரே பதிலளிப்பது தான் சிறந்ததாக இருக்கும்.

ஒவ்வொரு மனிதனுக்கு ஓய்வு தேவை. அந்த வகையில் அவர் ஓய்வெடுத்து சென்றார். இதனை அரசியலாக்குவது மிகவும் தவறு. விரைவில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து வைப்பார்.

தமிழக பட்ஜெட் எத்தகையது?

தமிழக பட்ஜெட் குறித்த விவரத்தை நான் முழுமையாக அறியவில்லை. அதனால் இப்போது அது குறித்து எதுவும் கூறப்போவதில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரையில், ஆட்சி நிர்வாகம் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக-வின் தலைவர் ஜெயலலிதா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த கட்சியும் சரி ஆட்சியும் சரி பினாமி முறையில் நடக்கிறது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நாற்காலியில் அமர்வது குறித்தே இப்போது தான் முடிவெடுத்துள்ளார். அதற்கான தைரியமே முதல்வருக்கு இப்போது தான் வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் பாஜக-வின் நிலை என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு இடமில்லை. மக்களுக்கு தாமரைச் சின்னம் யாருடையது என்றே தெரியாது. அது தான் அவர்களது நிலை.

அந்தக் கட்சியின் எழுச்சி எந்த அளவுக்கு உள்ளது என்று நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தெரிந்த ஒன்றுதான்.

66 ஏ வரவேற்கத்தக்கது

சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள், கருத்துகளை குற்றமாகக் கருதும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ சட்ட விரோதமானது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் அத்துமீறல் கூடாது. விமர்சனங்களுக்கு எல்லை உண்டு. ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் அல்லது புகழ் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறுவது தவறானது.

தெளிவான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கதே. கருத்துச் சுதந்திரம் அனைவருக்கு உண்டு. அதனை எப்படி பயன்படுத்திகிறோம் என்பது தான் முக்கியம் என்றார்.