

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்பி இருந்தார்.
இவ் வழக்கில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில் மாறன் சகோதரர்கள், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளன.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சி.சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளித்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது