

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு விவரம்:
பெரம்பூரில் 1921-ம் ஆண்டு பின்னி ஆலை தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர். 1996-ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. பின்னி மில் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை லாப நோக்கத்தில் விற்க நிர்வாகம் முயற்சி மேற்கொள்கிறது. அதற்காக அந்த இடத்தில் விளம்பர போர்டும் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்யக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தேன். சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி மனு நிராகரிக்கப்பட்டது. நிபந்தனைகள் அடிப்படையிலே ஆங்கிலேய அரசாங்கம் இந்த நிலத்தை பின்னி மில்லுக்கு வழங்கியது. இப்போது நிபந்தனைகளை மீறுவதால், அந்த நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்வதுடன், அவற்றை அரசு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும்.
முதல் அமர்வு
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
பின்னி மில் மூடப்பட்டதில் இருந்து இதுவரையில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர் விரிவான மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.