மீத்தேன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

மீத்தேன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து
Updated on
2 min read

மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளபோதும், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. அந்தத் திட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய கருத்துகள் விவரம்:

டி.கே. ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி

ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, போராடி வரும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

வைகோ, மதிமுக பொதுச் செயலர்

மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நம்மாழ்வார் தனது வாழ்நாளின் கடைசி வரை போராடினார். திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நானும் அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். இந்த நிலையில், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தற்காலிக வெற்றியாக மட்டுமே கருதலாம்.

ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தாலேயே ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளாரே தவிர, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அல்ல. கடந்த ஜூலை மாதம்கூட இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகவே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைந்தால், எந்த நிறுவனத்தையும் காவிரி டெல்டாவில் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம்.

கனிமொழி, திமுக எம்பி

மீத்தேன் எரிவாயு தோண்டியெடுக்க ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம், தொழில்நுட்ப ரீதியான சில நடைமுறைகளை நிறைவேற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்ததை ரத்து செய்வதால் மட்டும் டெல்டா விவசாயிகளை சூழ்ந்துள்ள அபாயம் நீங்காது. மாறாக, மீத்தேன் திட்டத்தையே முழுமையாக ரத்து செய்வதே விவசாயிகளுக்கு நிம்மதியைத் தரும். எனவே, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை வெற்றியாகக் கருத முடியாது.

பி.ஆர்.பாண்டியன், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி எங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். இந்த நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், காவிரிப் பிரச்சினை உட்பட விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in