Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை: புதிய வாக்காளர்கள் 10 கோடி பேர்

மக்களவைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகக்கூடும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது 71.3 கோடி பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 81.4 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 10 கோடி வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

இதனால் இந்தத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட் டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம் ஜய்தி ஆகியோர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகார பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இன்னும் சில நாட்களில் முறைப்படி அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 மணிக்கு தொடங்கலாம்

தற்போது காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஒன்பது மணி நேரம் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கலாம் அல்லது மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடை பெறுவதால் மாலை நேரத்தில்தான் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாலையில் ஒரு மணி நேரத்தை அதிகரித்து 6 மணி வரை வாக்குப்பதிவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது மாலை நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் குவிந்தனர். மாலை 5 மணிக்குப் பிறகு பல்வேறு வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்காக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அந்த சட்டமன்றத் தேர்தல்களில் வழக்கத்தைவிட வாக்குப் பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x