

அண்ணா பல்கலைக்கழகத்தின் அண்ணா சமுதாய வானொலிக்கு தொடர்ந்து 2-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது.
சமுதாய வானொலி (கம்யூனிட்டி ரேடியோ) மூலம் ஒலிபரப்பப்படும் சிறந்த நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தேசிய விருது வழங்கி வருகிறது. “புத்தொளி” என்ற நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழக சமுதாய வானொலிக்கு 2013-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு கிடைத்தது. இந்த சமுதாய வானொலியை (அண்ணா) பல்கலைக்கழகத்தின் கல்வி பல்லூடக ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், “மகளிர் நேரம்” என்ற சிறப்பு தொடர் நிகழ்ச்சிக்காக அண்ணா சமுதாய வானொலி 2014-ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற 5-வது தேசிய சமுதாய வானொலி விழாவில் மத்திய நிதி அமைச்சரும், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான அருண் ஜேட்லி விருதை வழங்கினார். ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, பாராட்டுச்சான்று, பரிசுக்கோப்பை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.
பெண்களின் மேம்பாடு தொடர்பான “மகளிர் நேரம்” என்ற நிகழ்ச்சி 45 தொடர்களாக அண்ணா சமுதாய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர் பாராட்டு
தேசிய விருது பெற்றதை தொடர்ந்து, சமுதாய வானொலியை நடத்தி வரும் கல்வி பல்லூடக ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், ஊடகவியல்துறையின் தலைவருமான எஸ்.கவுரி, சமுதாய வானொலி நிலைய பொறுப்பாளர் வினோத் ராஜேஷ் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந் தர் எம்.ராஜாராமை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து 2-ம் முறையாக தேசிய விருது பெற்றதற்காக துணைவேந்தர் ராஜாராம் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.