Published : 23 Mar 2015 11:18 AM
Last Updated : 23 Mar 2015 11:18 AM

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட புதிய சட்டங்கள் வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் வேண்டுகோள்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட, புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் சீர்திருத்தம் குறித்து நேர்காணல் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா, தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும், வாக்காளர் களுக்கு பணம் தரப்படுவதும் உண்மைதான் என்று கூறியிருக் கிறார். ஆனால், இதை சட்டத்தால் திருத்த முடியாது என்று அவர் கைவிரித்திருக்கிறார்.

இன்றைய சூழலில் தேர்தலில் பணபலம் முக்கியப் பங்காற்று கிறது. பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது என்ற உண்மையை பிரம்மா பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார். அதே நேரத்தில், இதற்கான சரியான தீர்வை அவரால் சொல்ல முடியவில்லை.

தேர்தலில் பணபலத்தைத் தடுப்பதற்காக எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. சட்டம் எதையும் சாதிக்கப்போவதில்லை. மக்கள் தங்களின் நலனுக்காக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரே நாளில் சாத்தியமாகிவிடாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவையும் பணம்தான் தீர்மானித்தது. 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணம் தருவதற்காகவே ஆளுங்கட்சியால் ரூ.1600 கோடி செலவிடப்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பண விநியோகத்துக்கு உதவி செய்யத்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததே தவிர, பணபலத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, வாக்காளர் களுக்கு பணம் தரப்பட்டது உண்மைதான். ஆனால், அதை எங்களால் தடுக்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அவலமும் நடந்தது.

தேர்தலில் பணபலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும் போது இருக்கும் சட்டத்தை தீவிரமாக பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டத்தைக் கொண்டுவந்தும் நடவடிக்கை எடுப்பதுதான் ஆணையத்தின் கடமையாகும்.

தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட எந்த இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டாலும் அந்தத் தொகுதியின் தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டு மின்றி, ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரியவந்தால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

எனவே, சட்டத்தின் இந்த பிரிவுகளை பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டங்களைக் கொண்டு வந்தும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்துக்கு ஆணையம் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x