Published : 07 Mar 2015 09:18 AM
Last Updated : 07 Mar 2015 09:18 AM

பஞ்சமி நிலத்தை குவாரி அதிபர்கள் வாங்கினார்களா?- பதிவுத்துறை அதிகாரிகளிடம் சகாயம் விசாரணை

பஞ்சமி நிலங்களை கிரானைட் அதிபர்கள் வாங்கியதில் நடை பெற்ற விதிமீறல் குறித்து பதிவுத் துறை அதிகாரிகளிடம் சகாயம் விசாரணை நடத்தினார்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் குவாரி முறை கேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் 8-வது கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய் வதற்காக இடைக்கால அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டி வரும் சகாயம், இதற்காக பல்வேறு துறைகளில் இருந்து விவரங்களை கேட்டுள்ளார்.

வணிக வரி, வருமான வரி, கனிமவளம், துறைமுக பொறுப் புக்கழகம் உட்பட பல்வேறு துறைகளில் இருந்து விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. காவல் துறையிடமிருந்து நேற்று சகாயத்துக்கு கடிதம் அனுப்பப் பட்டது. அதில், விவரங்களை சேகரிக்க தனிக்குழு அமைக் கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி தெரிவித்துள் ளார். மேலூர் பகுதியில் கிரானைட் அதிபர்கள் வாங்கியுள்ள நிலங் கள் குறித்த விவரங்களை பதிவுத் துறை, கிராம நிர்வாக அலுவலர் களிடம் சகாயம் கேட்டிருந்தார். இதற்காக மதுரை மாவட்ட பதிவுத் துறை தலைவர், தெற்கு மாவட்டப் பதிவாளர் ராஜசேகரன், வடக்கு மாவட்டப் பதிவாளர் கண்ணன், சிட்டம்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்களும் சகாயத்தை நேற்று சந்தித்தனர்.

இது குறித்து குழு அலுவலர் ஒருவர் கூறியதாவது: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பஞ்சமி நிலம் மோசடி, நீர்நிலைகள் அழிப்பை முக்கிய நிகழ்வாக குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த விவரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க சகாயம் திட்டமிட்டுள்ளார்.

மேலூர் பகுதியில் மட்டும் பஞ் சமி நிலங்கள் 2,883 ஏக்கருக்கும் மேல் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் பெரும் பாலான நிலங்களை கிரானைட் அதிபர்கள் வாங்கியுள்ளனர். மேலும் நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் மீட் கப்பட்ட உபரி நிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலங் களை யார், எப்போது, எவ் வளவு வாங்கியுள்ளனர். பட்டா மாறுதல் நடந்தது எப்போது என்பன உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

2 ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் இருப்பதால் விவரங்களை சேகரித்து வழங்க மேலும் ஒருவாரம் அவகாசம் வேண்டும் எனப் பதிவுத் துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் நிலமாறுதல் குறித்த விவரங்களை அளித்துள்ளனர் என்றார்.

பஞ்சமி நிலம் யாருக்கு சொந்தம்?

வருவாய்த் துறை அலுவலர் கூறும்போது, ‘பஞ்சமர்கள் எனப்படும் ஐந்து வகையான ஆதிதிராவிட சமூகத்தினருக்கு இலவசமாக வழங்க ஒதுக்கப்பட்ட நிலத்தைதான் வருவாய்த் துறையில் பஞ்சமி நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிட மக்களுக்கு மட்டுமே இந்த நிலம் ஒதுக்க வேண்டும். இந்த நிலத்தை விற்க, வாங்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், 40, 50 ஆண்டுகளுக்கு முன்பே வகைப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலம் பல மாவட்டங்களில் பலருக்கு மாறி, மாறி விற்கப்பட்டுவிட்டன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x