

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பார்வையற்ற பட்டதாரிகளுக்கும் வேலை வழங்குவது, முதுகலை ஆசிரியர் பணிக்கு சிறப்பு போட்டித்தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை யற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னை யில் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களின் தொடர் போராட்டம் 10-வது நாளாக நேற்றும் நீடித்தது. கடந்த 2 நாட்களாக அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் அசோக் குமார் தலைமையில் 7 பேர் தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, உயர்கல்வி அமைச்சர் பி.பழனியப்பன், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மணிவாசன் ஆகியோர் டிபிஐ வளாகத்துக்குச் சென்று பார்வையற்ற பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து அசோக்குமார் கூறும்போது, “அரசு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லாததால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்கும், அதேபோல் ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைக்கும் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார். அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று, எங்கள் தொடர் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பார்வையற்ற பட்டதாரிகளின் 10 நாள் தொடர் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.