Published : 14 Mar 2014 08:41 AM
Last Updated : 14 Mar 2014 08:41 AM

ஆம் ஆத்மியில் பத்திரிகையாளர் ஞாநி: தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டி?

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

கட்சியில் சேருவது குறித்து தொடக்கத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஞாநி தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளார்.

அரசியல் புதிதல்ல:

ஞாநிக்கு அரசியல் புதிதல்ல. ஒரு முன்னணி ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் அவர். பின்னர், இடதுசாரி இயக்கம் சார்ந்த பல மேடைகளில் ஒரு விமர்சகராக, பேச்சாளராக முழங்கியவர்.

ஈழப் பிரச்சினை பெரும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்த 1980-களின் இறுதியில் ஈழத் தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் திராவிட இயக்கத்தினரோடு கைகோத்தார். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட அவர், அந்தக் காலகட்டத்தில் ராஜீவ் காந்தியை எதிர்த்து வி.பி.சிங் ஜன் மோர்ச்சாவைத் தொடங்கியபோது தமிழகத்தில் அதன் தொடக்க விழாவில் வி.பி.சிங் பேச்சை மொழிபெயர்த்தார்.

பிறகு தி.மு.க.வும் வி.பி.சிங்கின் ஜனதா தளமும் சேர்ந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும் மேடையில் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்ப்பவராகச் செயல்பட்டார். தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து வி.பி.சிங் தமிழகமெங்கும் பேசிய எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் அவர் உரையை மொழிபெயர்த்தவர் ஞாநிதான்.

அந்நாட்களில் தி.மு.க.வோடு மிக நெருக்கமாக இருந்த ஞாநி, கூடிய விரைவிலேயே அந்த இயக்கம் தந்த ஏமாற்றத்தின் விளைவாக தி.மு.க.வை விட்டும், அரசியலைவிட்டும் ஒதுங்கியே இருந்தார். அப்போது தொடங்கி பத்திரிகைகளில் அரசியல் விமர்சகராக மட்டுமே அரசியலோடு தொடர்புகொண்டிருந்த அவர், இப்போது முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் மூலம் நேரடி அரசியலில் கால் பதிக்கிறார்.

தயாநிதி மாறனை எதிர்த்து..?

ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று இன்னமும் இறுதிசெய்யப்படாவிட்டாலும் ஆ.ராசா, தயாநிதி மாறன் இருவருக்கும் எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில் மட்டும் உறுதியாக இருக்கிறது.

ராசா நீலகிரியில் போட்டியிடும் சூழலில், ஞாநி அங்கு போட்டியிடும் வாய்ப்பு இல்லை. ஆகையால், தயாநிதி மாறனை எதிர்த்து அவர் களம் இறக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x