Published : 30 Mar 2015 09:43 PM
Last Updated : 30 Mar 2015 09:43 PM

ரூ.7,650 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார்

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கூடுதல் நிதி, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்தல் என பல்வேறு இனங்களுக்காக ரூ.7,650 கோடி நிதி ஒதுக்க வகை செய்யும் இறுதி துணை மதிப்பீடுகளை பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கடந்த டிசம்பர் 4-ம் தேதி, 2014-15 நிதி ஆண்டுக்கான இரண்டாவது துணை மதிப்பீடுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பிறகு புதிய பணிகள், துணைப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்த செலவினங்களுக்கு இப்பேரவையின் ஒப்புதல் பெறவும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதுமே துணை மானியக் கோரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.95.50 கோடி, சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையின் 0.6-வது கி.மீட்டரில் இருந்து 12/6 கி.மீட்டர் வரை நான்கு வழிப்பாதையை 6 வழிப் பாதையாக மேம்படுத்த ரூ.115 கோடி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.58.65 கோடி ஒதுக்கப்பட்டது.

மேலும், புதிதாக 252 பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.36.21 கோடி, தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்ப நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த பயிற்சிப் பட்டறைக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.22.77 கோடி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு துணைக் கடனாக ரூ.598.22 கோடி, நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமத்தில் தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு ரூ.58.48 கோடி உட்பட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.7,650.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையை அந்தந்த துறைக்கு வழங்க துணை மதிப்பீடுகள் வழிவகை செய்கின்றன.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x