

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வி.கூத்தம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் கொடுத்தார்.
அதில், "சென்னை வில்லிவாக்கம் பாபா நகர் 13-வது தெருவில் வசிக்கும் ஸ்ரீராமன்(52) என்பவர், எனது மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக நான் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்தேன். அதை பெற்றுக் கொண்ட அவர் ரயில்வேயில் எனது மகனுக்கு வேலை கிடைத்தது போல ரயில்வே முத்திரையுடன் கூடிய ஒரு ஆணையை கொடுத்தார். அதைக்கொண்டு வேலையில் சேர சென்றபோதுதான் அது போலி என்பது தெரிந்தது.
ஸ்ரீராமனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, தருவதாகக் கூறி ஏமாற்றி வரு கிறார். இப்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, வீட்டையும் இடமாற்றம் செய்துவிட்டார். அவரைக் கண்டுபிடித்து நான் கொடுத்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
புகாரின்பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில், ஸ்ரீராமன் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந்தது. சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்வே பிரிவில் சுமார் 25 ஆண்டுகளாக ஸ்ரீராமன் பணி புரிகிறார். இதை பயன்படுத்தி பலரிடம் ரயில்வே துறையில் அதிகாரி வேலை மற்றும் கேங்க்மேன், கலாசி, துப்புரவாளர் போன்ற வேலைகள் வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்திருப்பது தெரிந்தது. பலரிடம் பணத்தை நேரிலும், சில ரிடம் தனது நண்பர் முருகன் என்ப வரின் வங்கி கணக்கு மூலமாகவும் பெற்றிருக்கிறார் ஸ்ரீராமன்.
பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்காத நிலையில் அவர்கள் பணத்தை திருப்பி கேட்கும்போதெல்லாம் பல காரணங்களை நம்பும்படி கூறி காலம் கடத்தியிருக்கிறார். போலீஸில் புகார் கொடுத்ததை அறிந்ததும், தனது குடும்பத்தினரை சென்னையில் ஒரு வீட்டில் தங்க வைத்துவிட்டு, ஸ்ரீராமன் தலைமறை வாகிவிட்டார். வேலைக்கும் செல்லவில்லை. இந்நிலையில் போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி நேற்று பிற்பகல் அவரை வில்லிவாக்கம் அருகே கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை யில், வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கும் தகவல் போலீஸா ருக்கு தெரியவந்துள்ளது. இன்னும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.