

மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவ்வை நடராஜன் அறிவித் துள்ளார்.
மத்திய செம்மொழி தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவராக அவ்வை நடராஜன் பணியாற்றி வந்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான அவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவன துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த 4 மாதங் களுக்கு முன்பு அவ்வை நடராஜன் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பேராசிரியர் பிரகாசம் செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவ்வை நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மத்திய அரசின் ஆணைக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. அவ்வை நடராஜன் தொடர்ந்து துணைத்தலைவராக இருந்துவந்தார்.
இந்நிலையில் செம்மொழி தமிழா ராய்ச்சி நிறுவன துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவ்வை நடராஜன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
துணைத்தலைவர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் முடிவெடுத்துவிட்டது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும்கூட, மத்திய அரசு விரும்பாதபோது அந்த பணியில் தொடர எனக்கு விருப்பமில்லை. எனவே, துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதுதான் சரியாக இருக்கும். மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவ்வை நடராஜன் கூறினார்.
கடந்த வாரம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழி வார விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவ்வை நடராஜனின் பணிகளைப் பாராட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.