Published : 06 Mar 2014 07:21 PM
Last Updated : 06 Mar 2014 07:21 PM

அதிமுக அணியில் இருந்து விலகல்: கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு- திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா?

அதிமுக அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்தார். எனினும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், இரு கட்சி தலைவர்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை சந்தித்து பேசினர். அக்கூட்டத்துக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணியை முறியடிக்க அதிமுகவுடன் போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தனித்தே தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்று அதில் கூறியுள்ளனர்.

தனித்துப் போட்டியா?

இடதுசாரிகள் தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் பதிலளிக்கும்போது, “இடது சாரி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது இன்று எடுக்கப்பட்ட முடிவு. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு கட்சிகளும் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும்” என்று கூறினர். ஆக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்துப் போட்டியா அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியா என்பது பற்றி முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.

சென்னையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பேசிய பலரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

தி.மு.க. தலைமையிடமிருந்து மரியாதையான அணுகுமுறை வெளிப்பட வேண்டும். கவுரவமான எண்ணிக்கை மற்றும் கட்சியின் பாரம்பரியமான தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்தக் கட்சியுடன் பேசவேண்டும் என்று நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இது தவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முடிவுக்கு உடன்பட்டால் மட்டுமே தி.மு.க.வுடன் அணி சேர்வது என்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவும் ஒத்த முடிவாக இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இரு கட்சி நிர்வாகிகளும் சந்தித்தபோது, தி.மு.க.வுடன் கூட்டணி சேருவது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் பெரும் தயக்கத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x