

துளசிதாசர் இந்தியில் எழுதிய ‘ஸ்ரீராமசரித மானஸ்’ நூல், துளசி ராமாயணம் என போற்றப்படுகிறது. இதற்கு முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் உரை எழுதியுள்ளார். 4 தொகுதிகளைக் கொண்ட இந்த நூலை வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபா அரங்கில் நேற்று நடந்தது.
நூல் குறித்த அறிமுக உரை யை வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் வழங்கினார். முதல் பிரதியை பாஜக மூத்த தலைவரும் பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவருமான இல.கணேசன் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவில் இல.கணேசன் பேசும்போது, ‘‘வால்மீகி ராமா யணம் பண்டிதர்களுக்கான நூல். அதை விளக்கவுரை மூலமாகவே புரிந்து கொள்ள முடியும். ஆனால், துளசி ராமாயணம் பாமரர்களும் புரிந்துகொள்ளக்கூடியது.
அறிஞர்கள் மத்தியில் விவாதப் பொருளாக இல்லாமல் ஒரு பக்தி நூலாக உள்ளது. இது சைவம், வைணவம் இரண்டுக்கும் பொதுவானதாக உள்ளது. ராமாயண காலம் என்பது முடியாட்சி காலம் என்றாலும் அப்போது ஜனநாயகம் இருந்தது. அதை இந்த நூல் வாயிலாக அறியலாம்’’ என்றார்.
நூலுக்கான ஆசி உரையை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா வழங்கினார். திறனாய்வு உரையை கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் புனிதா ஏகாம்பரம், மதிப்புரையை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் வழங்கினர். நூல் ஆசிரியர் முனைவர்
எம்.கோவிந்தராஜன் ஏற்புரை வழங்கினார்.