

கூடங்குளம் 2-வது அணுஉலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்க ஏதுவாக வெப்பநீர் சோதனை ஓட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அனுமதி அளித்தது.
இதையடுத்து வெப்பநீர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு ஒத்துழைத்த சுற்றுவட்டார கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
வெப்பநீர் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக நீராவி பாய்ந்து செல்லும் பாதை மற்றும் நீராவியை வெளியேற்றும் உபகரணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டத்தின்போது அதிக சத்தம் ஏற்பட்டது. இது இயல்பானதுதான். யாரும் அச்சப்பட தேவையில்லை.
ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் உள்ள முதலாவது அணுஉலையில் மார்ச் 25-ம் தேதி வரை 534 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.