

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என கொடிகட்டிப் பறந்த நடிகரும், இசைக் கலைஞருமான மறைந்த எம்.கே.தியாகராஜ பாகவ தருக்கு அவர் வாழ்ந்த திருச்சியில் மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கோரிக்கை ஆண்டுகள் பல கடந்தும் நிராசையாகவே தொடர்கிறது.
மயிலாடுதுறையில் கிருஷ்ண மூர்த்தி- மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 1.3.1910-ல் பிறந்தவர் தியாகராஜன். பள்ளிப் படிப்பில் போதிய நாட்டமில்லாத தியாகராஜன், அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடித்து தனது கலைத்திறனை வெளிப்படுத் தினார்.
உருக்கமான நடிப்பும், மயக்கும் குரலும் அவரது வெற்றிக்கு மென்மேலும் மெருகேற்றி, புகழின் உச்சிக்கு அவரைக் கொண்டு சென்றன. இந்த நிலையில் கொலைப் பழிக்கு ஆளான பாகவதர், சிறையில் அடைக்கப் பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு நடிப்பதற்கு வந்த வாய்ப்பு களை பெரும்பாலும் மறுத்து, 5 படங்களில் மட்டுமே நடித்தார்.
பாகவதர் நடித்த சிவகாமி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது (1.11.1959) அவர் இறந்தார். அவரது இறுதிச் சடங்கும் இந்த திரைப்படத்தில் சேர்க்கப்பட்டு ரசிகர்களின் பார்வைக்குச் சென்றது. திரையுலகின் உச்சத்தில் இருந்த பாகவதரின் புகழைப் பறைசாற்றும் வகையில் அவர் வாழ்ந்த திருச்சியில் எஞ்சியிருப்பது சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது சமாதி மட்டுமே.
பாகவதரின் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவரது சமாதியில் மரியாதை செலுத்தி, காலத்தால் அழிக்க முடியாத திரைக்கலைஞரை நினைவுகூர்ந்து வருகிறது திருச்சியில் உள்ள விஸ்வகர்மா மகாஜன சபை. பாகவதர் வாழ்ந்த திருச்சியில் அவருக்கு மணிமண்டபம் கட்டி, சிலை அமைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.