

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் கணவன், மனைவியை கடித்துக் கொன்ற கரடியை அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து மேலும் ஒரு கரடி பீதி, மக்களை தொற்றிக்கொண்டுள்ளது. இந்த கரடியைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மீட்புப் படை உருவாக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி அருகே கேர்பென் தொட்டமொக்கை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியில் இருந்த மாதி (40) என்ற பெண்ணை, கரடி தாக்கிக் கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற கணவர் ஆலன், மகன் தினகரன், உறவினர் குமார் ஆகியோரையும் கரடி தாக்கியது. அவர்கள், கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆலன், குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கரடியை பிடிக்க வலை யுடன் வனத் துறையினர் காத்திருந்தபோது, மக்கள் கூச்சலிடவே, கரடி ஆவேசமடைந்து ஓடி, வனவர் ஸ்டேன்லி, காவலர் கருணாமூர்த்தி ஆகியோரை கடுமையாகத் தாக்கியது. இதையடுத்து, கரடியை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கரடி, சுமார் 10 வயதுடைய ஆண் கரடி. ரத்தசோகை நோயாலும், பல்வேறு அல்சர்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக முதுமலை கால்நடை மருத்துவர் விஜயராகவன் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ஆலன் நேற்று காலை உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
தொட்டமொக்கை பகுதியில் மேலும் ஒரு கரடி சுற்றித் திரிவதாக மக்கள் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினருக்கு உதவவும், முதுமலையில் மனித - விலங்கு மோதலைத் தடுக்கவும், வனத்துறையில் சிறப்பு மீட்புப் படை உருவாக்க வனத்துறை மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பொ.சங்கர் தெரிவித்தார்.
கரடி கடித்து இறந்தவர்களின் குடும்பத் துக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.