Published : 31 Mar 2015 09:46 AM
Last Updated : 31 Mar 2015 09:46 AM

நிலம் கையக சட்டத்தை அதிமுக ஆதரித்தது ஏன்? - பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

பொதுநலனுக்காகவே நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது என்று சட்டப்பேரவையில் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவா தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியின்போது காப்பீட்டு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்ற வற்றை எங்களோடு சேர்ந்து அதிமுக எதிர்த்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இந்த அவசரச் சட்டத்தை சட்ட மாக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது எதிர்க் கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில் மேலும் 9 திருத்தங்கள் செய்யப்பட்டன.

நில எடுப்பு தொடர்பாக சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சில விலக்குகள் அளிக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவின் முடிவு ஆகும். அதன் அடிப்படையில் அதிமுக முன்மொழிந்த திருத் தத்தை பாஜக அரசு ஏற்றுக் கொண்டு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டத் திருத்தத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக் கப்பட்ட சலுகைகளை விலக்கிக் கொண்டது. எனவே, சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்கள வையில் அதிமுக வாக்களித்தது.

முந்தைய காங்கிரஸ் அரசின் சட்டப்படி, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முன்பு 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், அந்த நிலம், விவசாயம் செய்வதற்கு தகுதிவாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்ததாக சொல்வது தவறு.

பொது நலத்துக்கான அரசு - தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பொது நலன் காரணமாக தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது மட்டுமே விவசாயிகளின் ஒப்புதல் பற்றி அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது பாதிக்கப்படும் குடும்பங்களில் 80 சதவீதம் பேரிடமும் அரசு - தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு 70 சதவீதம் பேரிடமும் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றுதான் உள்ளது. தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்ட 5 வகை நில எடுப்புகளுக்கு இது முற்றிலுமாக கைவிடப்பட்டதாக கூறுவது சரியல்ல. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

பொது நல நோக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதது. நிலங்களை கையகப்படுத்தும்போது, அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டு நிலத்தை இழந்தவர்களுக்கு மறுவாழ்வும், மறு குடியமர்வும் கிடைக்கிறதா என்பதும் நில எடுப்பின் காரணமாக பொதுநலன் காக்கப்படுகிறதா என்பதும்தான் கருத்தில்கொள்ளப்பட வேண்டியவை. அந்த வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா பொது நலனுக்காகவே என்பதால்தான் அதை அதிமுக ஆதரித்தது.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x