

ஊர் பெயரும், வட்டத்தின் பெயரும் தவறாக இடம் பெற்றுள்ளதால் ஆதார் அடையாள அட்டை பெற முடியாமல் ஒரு கிராமமே தவிக்கிறது.
சமையல் எரிவாயு மானியத்தில் தொடங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதார் அட்டையில் இடம்பெறும் கிராமத்தின் பெயர், வட்டத்தின் பெயர் தவறாக இருப்பதால், ஆதார் அட்டை பெற முடியாமல் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மக்கள் தவிக்கின்றனர்.
தமிழக அரசு பதிவேட்டில் மேல்வில்வராயநல்லூர் என்றும் மத்திய அரசின் பதிவேட்டில் வில்வாரணி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெயர்கள் மட்டும் இல்லாமல் எம்.வி.நல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய ரேஷன் கார்டுகளில் மேல்வில்வராயநல்லூர் என்றும், புதிய ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் எம்.வி.நல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமம் மற்றும் வட்டத்தின் பெயர்களை திருத்தம் செய்து சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர் இப்பகுதி மக்கள். இதில், குக்கிராமமான கச்சேரிமங்கலமும் பாதிக்கப்பட்டுள்ளது. பெயர் பிரச்சினையால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நெசவாளர் விஜயலிங்கம் (70) கூறும்போது, “போளூர் வட்டத்தில் இருந்து பிரித்து, கலசபாக்கம் வட்டம் தொடங்கியதும் எங்கள் கிராமம் அதில் இணைக்கப்பட்டது. ஆனால், போளூர் வட்டம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்த இரு பிழைகளை திருத்தம் செய்ய வேண்டும். கிராமத்திலேயே சிறப்பு முகாம் நடத்த வேண்டும்” என்றார்.
கண்ணகி என்பவர் (50) கூறும்போது, “100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்றால், ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்கின்றனர். கிராமம் மற்றும் வட்டத்தின் பெயர்கள் தவறாக இருப்பதால், ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை” என்றார்.
தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியரும், ஆதார் அடையாள அட்டை பணிகளின் அலுவலருமான வெங்கடேசன் கூறும்போது, “ஆங்கில எழுத்தில் உள்ள திருத்தங்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவில்தான் மாற்றம் செய்ய முடியும். விரைவில் மேல்வில்வராயநல்லூர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்” என்றார்.