

வேலூர், மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. பத்தாண்டுகளில் முதல் முறையாக சென்னையில் வெயில் 110 டிகிரியை எட்டியுள்ளது.
கடல் காற்று தாமதமாக வீச ஆரம்பிப்பதுதான் இதற்கு காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘சென்னையில் கடல் அமைந்திருக்கும் கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீச தொடங்கும். எப்போது காற்று வீச தொடங்குகிறது என்பதை பொறுத்துதான், நகரத் தின் வெப்ப அளவு மாறுகிறது. சனிக்கிழமை, கடல் காற்று மதியம் 12.15 மணிக்கு வீச தொடங்கியது. எனவே வெப்பம், 105 டிகிரியாக இருந்தது.
ஆனால், கடந்த வெள்ளிக் கிழமை அன்று மாலையில்தான் கடல் காற்று வீச தொடங்கியது. இதனாலேயே அன்று வெயில் 110 டிகிரியை எட்டியது’ என்றார்.
காற்றில் கடல் காற்று, தரைக் காற்று என்று இரண்டு வகையானவை இருக்கின்றன. கடலும் தரையும் சமமற்ற முறையில் வெப்பமடைதலும், குளிர்வடைதலும் நிகழ்கின்றன. பகல் நேரத்தில் கடலை விட நிலம் வெப்பமாக இருக்கும். அப்போது நிலத்தை நோக்கி கடலிலிருந்து காற்று வீசும். இது கடல் காற்று. அப்போது நிலத்தில் இருக்கும் வெப்பத்தை அது குறைக்கும்.
இரவிலும் அதிகாலையிலும் கடலைவிட நிலத்தில் வெப்பம் குறைவாக இருக்கும். அப்போது கடலை நோக்கி காற்று வீசும். அது தரைக் காற்று. அப்போது கடலில் உள்ள வெப்பத்தை குறைக்க இது உதவும்.