ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி சித்ரவதை: விளம்பரம் பார்த்து பணம் பறிக்கும் கும்பலின் செயலா?

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை காரில் கடத்தி சித்ரவதை: விளம்பரம் பார்த்து பணம் பறிக்கும் கும்பலின் செயலா?
Updated on
1 min read

‘மணமகள் தேவை’ விளம்பரம் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி சித்ரவதை செய்த கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் அருகே கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). தனியார் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவியைப் பிரிந்து வசிக்கிறார். குழந்தைகள் கிடையாது. 2-வது திருமணம் செய்துகொள்வதற்காக இணையதளம், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஒரு பெண் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ‘‘என் பெயர் வைஷ்ணவி. மணமகள் தேவை விளம்பரம் பார்த்தேன். கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வாருங்கள். நேரில் பேசலாம்’’ என்றார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை ராமமூர்த்தி கோயம்பேட்டுக்கு சென்றார். அந்த பெண்ணும் அங்கு வந்திருந்தார். ராமமூர்த்தியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ‘‘என் குடும்பத்தினரும் வந்துள்ளனர். மற்ற விஷயங்களை வீட்டில் வைத்து பேசிக்கொள்ளலாம்’’ என்றார்.

காரில் 2 பெண்கள், 4 ஆண்கள் இருந்தனர். காரில் ராமமூர்த் தியை ஏற்றிக்கொண்ட அவர் கள், அவரைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாகக் கேட்டனர்.

பின்னர், அவரை சரமாரியாக தாக்கி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 லட்சம் எடுத்துத் தரும்படி மிரட்டினர். அவரை ஓர் அறையில் அடைத்துவைத்து இரவு முழுவதும் சித்ரவதை செய்துள்ளனர்.

பணம் எடுத்துத் தருவதாக அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கிக்கு அவரை நேற்று காலை அழைத்து வந்தனர்.

கும்பல் தப்பியோட்டம்

அது அவர் பணியாற்றிய வங்கி. பணம் எடுத்துவருவதாக கூறிவிட்டு உள்ளே சென்ற ராமமூர்த்தி, நடந்த விஷயங்கள் பற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அழுதபடி கூறினார். அவர்கள் உடனே தாம்பரம் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதற்குள், அந்த கும்பல் தப்பிவிட்டது.

இதுபோல விளம்பரம் வெளி யிடும் வயதானவர்களை மிரட்டி பணம் பறிப்பதை அந்த கும்பல் தொழிலாகவே செய் திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in